நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி: முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.
நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி: முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சுமார் 40,000 ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் மேற்கண்ட நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயப் பெருமக்கள், மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கும், இதன்மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் வழிவகை ஏற்படும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விவசாயப் பெருமக்கள் மற்றும் மட்பாண்டத் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டுமென்றும், விவசாயிகள் மற்றும் மட்பாண்டத் தொழிலாளர்கள் தொடர்புடைய துறை அலுவலர்களின் மேற்பார்வையில் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், விவசாயிகள், மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலான வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதற்கு tnesevai.tn.gov.in இணையதள வாயிலாக பதிந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும்.

இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றிட 2026-2027ம் ஆண்டிற்கான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட அளவிலான அரசிதழில் வெளியிடக் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி இத்திட்டத்தைக் கண்காணிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com