

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன.
சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இதனால் சினிமா தொழிலில் முடக்கம் ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத்தொடங்கிய நிலையில் சில மாதங்களுக்கு பிறகு சினிமா படப்பிடிப்புக்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சினிமா படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
படப்பிடிப்பின்போது சமூக இடைவெளி உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி கேட்டு அரசுக்கு சினிமா துறையினரிடம் இருந்து வலியுறுத்தல்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி, தியேட்டர்களை இயக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.
ஆனால் பெரிய அளவில் செலவு செய்து எடுக்கப்படும் படங்களை தியேட்டர்களுக்கு கொண்டு வருவதில் சினிமா துறையினருக்கு தயக்கம் இருந்தது. முழு அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால்தான் வசூல் கிடைக்கும் என்று எண்ணினர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் திரைப்படத்தை பொங்கல் பண்டிகையையொட்டி 13-ந்தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் கடந்த வாரம் நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதிக்கும்படி முதல்-அமைச்சரிடம் நடிகர் விஜய் கோரிக்கை விடுத்தார்.
தற்போது அதற்கான அனுமதியை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி உடனடியாக (நேற்று முதல்) அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் மருத்துவ நிபுணர் குழு, பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோரின் பரிந்துரை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு ஆகியவற்றுக்கு இணங்க இம்மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, நவம்பர் 10-ந்தேதியில் இருந்து சினிமா தியேட்டர் கள், மல்டிபிளக்ஸ் அரங்கங் களை திறக்க அனுமதி அளிக் கப்பட்டது.
மேலும், அங்குள்ள மொத்த சீட்களில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அங்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடிப்படையாக கொண்டு, சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்களில் வாடிக்கையாளர் அமரும் இருக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
எனவே, சினிமா தியேட்டர் கள், மல்டிபிளக்ஸ் அரங்கங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 சதவீத இருக்கைகளின் எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பிக்கிறது. அங்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
பார்வையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சினிமா காட்சி நேரத்தில் தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.