ஸ்ரீரங்கத்தில் தொடர் கனமழை: 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது

பெரும் முதலீடு செய்து பயிர் செய்திருந்த அப்பகுதி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் தொடர் கனமழை: 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது.
விவசாய நிலம்
Published on: 

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, 2,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கிராமங்களைச் சூழ்ந்த வெள்ள நீர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியின் முக்கிய விவசாயப் பகுதிகளான திருப்பாற்றுத்துறை, எலமனூர் மற்றும் கொடியாளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கியுள்ளது.

பயிர்கள் அழுகும் அபாயம்

சாகுபடி செய்யப்பட்டு சில வாரங்களே ஆன இளம் நெற்பயிர்கள் மற்றும் இதர பயிர்கள் பல நாட்களாக தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதால், அவை அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் முதலீடு செய்து பயிர் செய்திருந்த அப்பகுதி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com