

தஞ்சை,
திருச்சிற்றம்பலத்தில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயன்றவர் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கோவில் தெருவில் சமீபத்தில் நகை அடகு கடை ஒன்று திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சம்பவத்தன்று வந்த ஒருவர் ஒரு பவுன் எடையுள்ள 2 வளையல்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர், அந்த நபரிடம் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றுக்கொண்டார்.
அந்த விவரங்களை சரிபார்த்த ஊழியர் ஏற்கனவே கடந்த மாதம் (ஜூலை) 28-ந் தேதி இதே செல்போன் எண்ணை பயன்படுத்தி குருவம்மா என்ற பெயரில் 4 கிராம் மோதிரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் பெற்றிருப்பதை கண்டறிந்தார்.
அதன்பிறகு கடை ஊழியர் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகையை சோதித்து பார்த்த போது, அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. மேலும் தற்போது கொண்டு வந்த நகைகளும் போலி என்பதும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து கடை உரிமையாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் திருச்சிற்றம்பலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 55) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஒரு ஆணும், பெண்ணும் தன்னை காரில் அழைத்து வந்து இந்த நகைகளை அடகு வைத்து தருமாறு கூறியதாக விஜயன் போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.