மூதாட்டியை பராமரிக்க ஆள் தேவை.. வேலைக்கு சென்ற இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

வேலை தேடி சென்ற இடத்தில், இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூதாட்டியை பராமரிக்க ஆள் தேவை.. வேலைக்கு சென்ற இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
Published on

மேலூர்,

வேலை தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணை கண்மாய்க்கு அழைத்து சென்று அங்கு கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இளம்பெண்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து அப்பெண் வசித்து வந்தார். கட்டிட வேலைக்கும் சென்று வந்தார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அனிதா என்பவர் அவரிடம் நட்பாக பழகினாராம்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு மூதாட்டியை பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் எனக்கூறி ஒரு செல்போன் எண்ணை அனிதா கொடுத்துள்ளார். அதன்படி அந்த எண்ணுக்கு இளம்பெண் தொடர்பு கொண்டு பேசினார்.

கூட்டு பாலியல் பலாத்காரம்

அந்த எண்ணில் பேசிய நபர் மேலூருக்கு வருமாறும், பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண் நேற்று முன்தினம் இரவு மேலூருக்கு வந்தார். அங்கு 20 வயது வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் தயாராக இருந்துள்ளார். அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு தாமரைப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் இளம்பெண் சந்தேகம் அடைந்து இங்கு ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்டுள்ளார்.

தப்பி ஓட்டம்

ஆனால் வாலிபர் பதில் ஏதும் சொல்லாமல் அந்த பெண்ணை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் அந்த இளம்பெண்ணை அங்கிருந்த 4 பேரும் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணிடம் இருந்து அரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

போலீஸ் நிலையத்தில் புகார்

பாதிக்கப்பட்ட இளம்பெண், மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலையரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் வலை வீசி தேடி வந்தனர்.

சிறுவன் உட்பட 5 பேர் கைது

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த செல்வக்குமார், வீரபாண்டி, அரவிந்த், வினித் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com