பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை கடந்ததால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
Published on

குலசேகரம்:

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை கடந்ததால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 36.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் பெருஞ்சாணி-18.2, சிற்றார் 1-31.2, சிற்றார் 2-15.6, மாம்பழத்துறையாறு-13.4, முக்கடல்-9.4, பூதப்பாண்டி-10.2, நாகர்கோவில்-5, தக்கலை-11.2, பாலமோர்-27.2, முள்ளங்கினாவிளை-18.2, சுருளகோடு-23 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1088 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து 45.18 அடியாக உயர்ந்தது. இதனால், அணையில் இருந்து நேற்று உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அந்த வகையில் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் 6 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

முன்னதாக உபரி மதகுகள் திறக்கப்படுவதை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி கண்காணித்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் மெக்கி சதேக், உதவிப்பொறியாளர் லூயிஸ் அருள்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர். குமா மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் 1-ந் தேதி முதல் பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பாசனத்திற்காக அணைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீ வெளியேற்றப்பட்டு உள்ளது.

கலெக்டரின் அறிவுறுத்தல்

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி கூறுகையில், "பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உச்ச அளவை நெருங்கி உள்ளது. அதோடு மழை தொடர்ந்து பெய்து வருவதால் கலெக்டரின் அறிவுறுத்தல்படி வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும். அதன்பிறகு மறுகால் மதகுகள் மூடப்பட்டு, பாசன மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும்." என்றார்.

அதே சமயம் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்து 51.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,115 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 109 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 166 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com