திப்பனப்பள்ளி ஏரியில் நீர்வரத்து கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

திப்பனப்பள்ளி ஏரியில் நீர்வரத்து கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
திப்பனப்பள்ளி ஏரியில் நீர்வரத்து கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
Published on

திப்பனப்பள்ளி ஏரியில் நீர்வரத்து கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

விளைநிலங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி கிராம பிரமுகர் கிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரிக்கு, மாரசமுத்திரம், பில்லனகுப்பம், பெரிய குந்தாரப்பள்ளி, பண்டுஏரி, பந்தாரப்பள்ளி ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர் வருகிறது.

இந்த தண்ணீர் பையனப்பள்ளி ஏரிக்கு செல்கிறது. திப்பனப்பள்ளி ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர், குடிநீர் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் திப்பனப்பள்ளி ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.

பயிர்கள் சேதம்

இதனால் ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய்கள், ஏரியில் இருந்து இருபுறமும் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாராமல் உள்ளது. மேலும் கால்வாய்கள், ஏரியில் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திப்பனப்பள்ளி ஏரிக்கு வடக்கு பகுதியில் பெங்களூரு நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள ஏரி வழியாக தண்ணீர் கிழக்கு பக்கமாக உள்ள பையனப்பள்ளி ஏரிக்கு செல்கிறது.

இதற்காக நிலம் பூர்வீகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலங்களையும் சிலர் ஆக்கிரமித்துவிட்டனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாய் வழியாக செல்லாமல், விவசாய நிலங்களுக்கு நுழைந்து பயிர்கள் சேதமாகிறது. எனவே, திப்பனப்பள்ளி ஏரி கோடியில் இருந்து பையனப்பள்ளி ஏரிக்கு செல்லும் பொது கால்வாய், கிழக்கு கரையில் உள்ள மதகில் இருந்து தெற்கு வடக்காக செல்லும் பொது ஏரி கால்வாய்களை அளவீடு செய்து தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com