விஜயேந்திரர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

விஜயேந்திரர் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரும் மனுவுக்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விஜயேந்திரர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் எஸ்.துரைசாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும், தொடக்கத்தில் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்தாய் வாழ்த்துப்பாடலை பாடவேண்டும் என்று 1970-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின்படி, ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் தமிழகத்தில் பாடப்பட்டு வருகிறது.

தேசிய கீதப்பாடலை பாடுவதை உள்நோக்கத்துடன் தடுத்தல், இடையூறு செய்தல் ஆகிய குற்றத்துக்காக ஒருவருக்கு, தேசிய சின்னங்கள் கவுரவ அவமதிப்புச் சட்டம், பிரிவு 3-ன்படி 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம். அதேபோல தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடும்போது இடையூறு செய்தாலும், இதே சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை வழங்கலாம்.

அவமதிப்பு

கடந்த ஜனவரி 23-ந்தேதி சென்னை ராயப்பேட்டை மியூசிக்கல் அகாடமியில் நடந்த ஒரு விழாவில் தமிழக கவர்னர், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது. அப்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல், இந்த பாடலுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக உட்கார்ந்தபடி இருந்தார்.

அரசு சட்டப்படி அமல்படுத்திய பாடலை, அவமதிக்கும் விதமாகவும், அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் செயல்படும் நபருக்கு இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124-ஏவின்படி (தேசதுரோகம்) அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கலாம்.

பதில் மனு

எனவே, இந்த பிரிவின் கீழ் விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், மனுவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com