பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஜமாபந்தியில் புகார் மனு

பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஜமாபந்தியில் புகார் மனு
Published on

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் தினந்தோறும் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

அப்போது திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன், விவசாய சங்க தலைவர் காந்தி ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பாப்பரம்பாக்கம் கிராமத்திலுள்ள மாராங்கேணி ஏரி மற்றும் தட்டானோடை ஏரி, குட்டையின் வரவு கால்வாய் போன்றவற்றை சிலர் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாலை அமைத்து ஆக்கிரமித்து வருகிறார்கள். இவர்கள் ஊராட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஏரியில் நீர் தேக்க முடியாமல் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com