

சென்னை,
தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர் நலச் சங்கத்தின் தலைவர் கே.ஆர். குகேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ''ரேஷன் பொருட்கள் வாங்கும் போது, கியாஸ் சிலிண்டர் பதிவின் போது, வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது வெளிப்படைத்தன்மைக்கு பொறுப்பேற்கும் வகையில் உடனடியாக பயனாளரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதைப் போல, வாக்குப்பதிவில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், வாக்குப்பதிவு செய்தவுடன் அதை உறுதிசெய்யும் வகையில், வாக்காளரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விட்ட நிலையில் இதில் கோர்ட்டு தலையிட முடியாது. அடுத்த தேர்தலில் இந்த நடைமுறையை அமல்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு மனுதாரார் மனு அளிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.