காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அன்புமணி கண்டனம்

கூட்டணி கட்சி தலைவர் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட ஆளும் திமுக அரசுக்கு துப்பில்லையா? என அன்புமணி விமர்சித்துள்ளார்.
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது  
பெட்ரோல் குண்டு வீச்சு: அன்புமணி கண்டனம்
Published on

சிவகங்கை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் புதல்வரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த வகையில் அவரது வீடு, அலுவலகம் என அவர் தொடர்புடைய இடங்களுக்கு காவல்துறை இயல்பாகவே பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய காவல்துறை தவறி விட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் எதுவும் இல்லாத நிலையில் கார்த்தி சிதமபரம் அலுவலகம் மீது குண்டு வீசியவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு கூட காவல்துறையால் முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல்தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் வருகிறது என்றால் அதைக் கொடுத்தவர்கள் யார் திமுக ஆட்சியில் எத்தகையக் குற்றங்களைச் செய்தாலும் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள் தண்டனையின்றி தப்பி விடலாம் என்ற எண்ணம் சமூகவிரோதிகள் மத்தியில் ஏற்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். திமுக அரசு தமிழ்நாட்டை ஆளத்தகுதியற்றதாகி விட்டது என்பதற்கு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தான் சிறந்த சான்று. தமிழ்நாட்டில் முன்னாள் உள்துறை அமைச்சரின் புதல்வராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவரின் அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண குடிமக்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் என்ன பாதுகாப்பு என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் விளக்க வேண்டும்.

ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாள்களும், ஒராண்டின் 52 வாரங்களும் விளம்பரப் படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது குண்டு வீசியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com