

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி வசித்து வருகின்றனர். இவர்கள் தூத்துக்குடியில் அமைந்துள்ள மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தொழிலாளர்கள் வீட்டின் உள் தூங்கிக் கொண்டிருந்தபோது, 4 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.
இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. வீட்டின் வெளிப்புறத்தில் உலர்த்தப்பட்டிருந்த துணிகள் தீப்பற்றி எரிந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரத் (வயது 20) மற்றும் ஹரிகார்த்திக்(19) ஆகிய 2 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.