

கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது45). இவர் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் வீடு மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து செந்தில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கும்பகோணம் தாராசுரம் மிஷன் தெரு பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் சக்தி ஹரிஷ் (19) மற்றும் 2 சிறுவர்களிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்திலின் உறவினரான சிறுவனுக்கும், மற்றொரு சிறுவனுக்கும் இடையே திருட்டு வழக்கு சம்பந்தமாக முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் செந்திலின் உறவினரான சிறுவனை மிரட்ட சென்றபோது ஏற்பட்ட தகராறில் செந்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சக்தி ஹரிஷ் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.