

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் நள்ளிரவில் டீக்கடை ஒன்றின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்த செம்புலிங்கம் மனைவி பத்மா. இவர் அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பஸ் ஸ்டாப் அருகே தனது மகனுடன் இணைந்து டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பத்மாவின் டீக்கடை முன்பாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இன்று அதிகாலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக பத்மா சென்றுள்ளார். அப்போது கடையின் முன்பகுதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.