நாங்குநேரியில் வீடு உள்பட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நாங்குநேரி, பெருந்தெருவிற்குள் நள்ளிரவில் மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள், திடீரென அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
நாங்குநேரியில் வீடு உள்பட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்தனர். அவர்கள் அங்குள்ள பெயிண்டரான அன்பழகன் என்பவருடைய வீட்டின் சுவர் மீதும், எதிரே உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியின்மீதும், அங்குள்ள கோவில் முன்பு தரையிலும் திடீரென அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே ஓடி வந்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அறிந்து அவர்கள் அதிர்த்தி அடைந்தனர். இதற்கிடையில் அந்த மர்ம நபர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த தெரு அருகில் நாகர்கோவில் செல்லும் சாலையில் வருகிற 24ம் தேதி டி.டி.வி.தினகரன் கலந்து கொள்ளும் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com