

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 57,345 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்து இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த இத்திட்டங்கள் ரத்துசெய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இது பா.ம.க.வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டால், அதில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும்.
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலைகள் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள ஏராளமான மின்சாரத் திட்டங்கள், கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் மக்களுக்கு பாதிப்புகள் நிறைய உள்ளன. இத்தகைய சூழலில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்த 2 மாவட்டங்களில் விவசாயம் அழிந்து போயிருக்கும்.
அத்திட்டம் கைவிடப்பட்டு இருப்பதன் மூலம் இரு மாவட்டங்களும் காப்பாற்றப்பட்டு உள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு பா.ம.க. நன்றி தெரிவித்துக்கொள்கிறது. விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடச்செய்து விவசாயத்தை காப்பாற்றியதில் பா.ம.க. பெருமிதம் அடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்த அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. காவிரி டெல்டா பகுதிகளை ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் இருந்து பாதுகாத்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.