பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழா: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழா: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
Published on

நெல்லை,

தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் மறைந்த பி.எச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சபாநாயகர் இருக்கையில் பி.எச்.பாண்டியன் அமர்ந்து இருப்பது போல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வழிகாட்டு குழு உறுப்பினருமான பி.எச்.மனோஜ் பாண்டியன் வரவேற்று பேசினார்.

பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். பி.எச்.பாண்டியனின் சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பத்தமடை பாய் ஆகியவற்றை பி.எச்.மனோஜ் பாண்டியன், பி.எச்.அரவிந்த் பாண்டியன் வழங்கினார்கள்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

முன்னாள் சபாநாயகர்பி.எச்.பாண்டியன் உருவச்சிலையை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். நெல்லை சீமைக்கு புகழ் சேர்த்தவர் பி.எச்.பாண்டியன். அவர் பயின்ற சட்டத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்டார். எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர். 1977, 1980, 1984, 1989 ஆகிய தேர்தல்களில் சேரன்மாதேவி தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றினார். 1985-ம் ஆண்டு சபாநாயகராக பொறுப்பேற்று இந்தியாவிலேயே சபாநாயகருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை காட்டினார்.

மேலும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தேவையான திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். நெல்லை மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பச்சையாறு திட்டத்திற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதற்கான ஆணையை பெற்று தந்தார். தற்போது அந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 10 ஆயிரம் டன் அரிசியை உடனே வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் போராடி பெற்று தந்தார். 1986-ம் ஆண்டு சபாநாயகருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி நில அபகரிப்பை மீட்க முயற்சி செய்தார். அதன் பயனாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இ.சி.ஆர். ரோடு பகுதியில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டு தந்தார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கோவிந்தபேரியில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுத்தார். இதன்மூலம் அந்த கல்லூரியில் 1,500 மாணவ-மாணவிகள் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள்.

பி.எச்.பாண்டியனுடைய துணிச்சல் என்னை கவர்ந்தது. எந்த காரியத்திலும் துணிச்சலுடன் செயல்படுவார். பி.எச். பாண்டியன் வாழ்க்கையை உதாரணமாக கொண்டு துணிச்சலுடன் அனைவரும் செயலாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஒரு இயக்கம் உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும் என்றால் தன்னலம் கருதாத வீரத்தளபதிகளையும், தொண்டர்களையும் அந்த இயக்கம் கொண்டிருக்க வேண்டும். அப்படி கொண்ட இயக்கம் அ.தி.மு.க. தான். எம்.ஜி.ஆரின் வீர தளபதியாக பி.எச்.பாண்டியன் செயல்பட்டார். அவர் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல கிரிமினல் வழக்குகளையும், அரசியலமைப்பு வழக்குகளையும் நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து பொதுக்குழு உறுப்பினராகவும், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளராகவும் செயல்பட்டார். சட்டசபையில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரம் எப்படி உள்ளது என்பதை இந்தியாவுக்கு எடுத்துக்காட்டினார் என்று அவர் கூறினார்.

மனோஜ் பாண்டியன் வரவேற்று பேசுகையில், எனது தந்தை பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆருக்கு தோள் கொடுத்து கட்சி பணியாற்றினார். அதேபோல் ஜெயலலிதாவுடன் இந்த கட்சிக்காக பணியாற்றினார். அவருடைய சேவையை பாராட்டி இன்று இந்த மணிமண்டபத்தை இந்த இருபெரும் தலைவர்கள் திறந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க.வே இங்கு வந்து உள்ளதால் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்களால் உருவான இயக்கம். தொண்டர்களை பாதுகாக்கும் இயக்கம். இந்த இயக்கத்திற்கு நாங்கள் என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, உதயகுமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைப்பு செயலாளர் கள் சி.த.செல்லப்பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், வழிகாட்டு குழு உறுப்பினர் பிரபாகரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா, நவநீதகிருஷ்ணன் எம்.பி., அரசு வக்கீல் சிவலிங்கமுத்து, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், ஏ.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை அ.தி. மு.க. அமைப்பு செயலாளரும், வழிகாட்டு குழு உறுப்பினருமான பி.எச்.மனோஜ் பாண்டியன், அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன், டாக்டர்கள் பி.எச்.நவீன்பாண்டியன், பி.எச்.தேவமணி பாண்டியன், வக்கீல் பி.எச். வினோத் பாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com