தூத்துக்குடியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி; அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 9 ஆயிரம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தூத்துக்குடியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி; அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அலுவலர்கள் ஆர்வத்துடன் தபால் வாக்குகளைச் செலுத்தினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 9,000 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு அலுவலர்கள் (நிலை 1, 2, 3) மற்றும் மண்டல அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து காணொலி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக; மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடத்தும் முறை, வேட்பாளர்களின் முகவர்களிடம் பெற வேண்டிய படிவங்கள் மற்றும் கையொப்பங்கள், வாக்காளர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கும் முறை, வாக்குச்சாவடிக்குள் செல்போன் மற்றும் தேவையற்ற நபர்களை அனுமதிப்பதைத் தவிர்த்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்களை பாதுகாப்பான முறையில் சீல் வைப்பது. ஒவ்வொரு நடைமுறையும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களைக் கொண்டு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தபால் வாக்கு செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தபால் வாக்கு செலுத்தச் சென்ற அலுவலர்களின் கைபேசிகள் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலிலேயே வாங்கப்பட்டன.

அலுவலர்கள் வரிசையில் நின்று, ரகசியக் காப்பு அறையில் தங்களது வாக்கினைப் பதிவு செய்து, அதற்கென வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் முனைப்பு காட்டி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com