இன்று உடல் தகனம் தமிழ் அறிஞர் க.ப.அறவாணன் மரணம் கவிஞர் வைரமுத்து அஞ்சலி

தமிழ் அறிஞர் க.ப.அறவாணன் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று(திங்கட்கிழமை) தகனம் செய்யப்படுகிறது.
இன்று உடல் தகனம் தமிழ் அறிஞர் க.ப.அறவாணன் மரணம் கவிஞர் வைரமுத்து அஞ்சலி
Published on

சென்னை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணன் (வயது 78). தமிழ் அறிஞரான இவர் சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, அவரது உயிர் பிரிந்தது.

க.ப.அறவாணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

க.ப.அறவாணன் உடல் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அரும்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

மரணமடைந்த க.ப.அறவாணனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலங்குடி ஆகும். இவருக்கு தாயம்மாள் என்ற மனைவியும், ஆசிரியர் அறிவாளன் செந்தில் என்ற மகனும், டாக்டர் அருள் செங்கோர் என்ற மகளும் உள்ளனர்.

க.ப.அறவாணன் 112 நூல்கள் எழுதி உள்ளார். திருவள்ளுவர் விருது, தமிழ் ஞாயிறு விருது, தமிழ் அறிஞர் விருது, தமிழ் செம்மல் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

தினத்தந்தி சார்பில் வழங்கப்படும் சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசும் அவருக்கு கிடைத்தது. இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இருந்தபோது அந்த பல்கலைக்கழகம் பல்வேறு மேம்பாடுகளை அடைந்தது.

க.ப.அறவாணன் இந்திய பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர் மன்ற செயலாளர், லயோலா கல்லூரி, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவர் பதவி போன்ற பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். வெள்ளுடை, தொப்பி அணிவது அவரது தனி அடையாளம் ஆகும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழறிஞரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். திராவிட இயக்கத்தின் மீது பற்றும், கருணாநிதி மீது தனிப்பட்ட அன்பும், நட்பும் கொண்டிருந்தவர் க.ப.அறவாணன். அறவாணனின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பாகும். தமிழறிஞர் க.ப.அறவாணனை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்ச் சான்றோர்களுக்கும் தி.மு.க. சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பா.ம.க., மற்றும் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் வளர்ச்சி பணிகளுக்கு துணையாக இருந்தவர் க.ப.அறவாணன். அவரது மறைவு தமிழுக்கும், தமிழாராய்ச்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், க.ப.அறவாணன் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன். அவரின் மறைவு உலகத்தமிழர்களுக்கு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் மீது அன்பும், மதிப்பும் கொண்டவர். அவரது நூல்களை நான் படித்து இருக்கிறேன். தமிழ் போராளி. அவருடைய உற்றார், உறவினர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வெள்ளை ஆடையும், வெள்ளை தொப்பியும் அறவாணன் அடையாளமாக திகழும். சிறந்த பண்பாளர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அறவாணனின் மறைவு தமிழுலகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அவருக்கு நான் மாணவன் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. கார்ல் மார்க்ஸ் இறந்தபோது என் நண்பன் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டான் என்று எழுதினார் ஏங்கல்ஸ். அறவாணன் இறந்தபோது, இதோ என் பேராசிரியர் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் என்று எழுத வேண்டியிருக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com