6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியீடு


6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியீடு
x

கோப்புப்படம் 

மாணவர்கள் தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை கற்றுத் தருவதற்கும், உடற்கல்விக்கும் பாடப்புத்தகங்கள் இல்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். மேலும் 2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டபோது, உடற்கல்விக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டது. அதன் பின்னர் பாடப்புத்தகங்கள் வரும் என உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 2024-25ம் கல்வியாண்டு வரையில் உடற்கல்விக்கு என தனியாக பாடப்புத்தகம் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 2025-ம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும், பதக்கங்களை வெல்லவும், சாதனை உணர்வை மேம்படுத்தவும், தங்களின் உடல் வலிமையை எண்ணிப் பெருமை கொள்ளவும் இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக்கல்வி, பாதுகாப்புக்கல்வி ஆகியவற்றை தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் விளையாட்டுகள், பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளில் மாணவர்களை ஈடுப்படுத்தும் போது, அவர்களின் உடல்நிலை, சூழல் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்; பின்னர் செயல்பாடுகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவலுடன், விளையாட்டுகளை கற்றுத்தரும் முறைகள் இந்த பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story