உடற்பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடப்புத்தகங்கள் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 58,985 பள்ளிகளுக்கு உடற்கல்வி நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன.
பள்ளிக்கல்வித் துறை
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தரமான உடற்கல்வி பயிற்சி அளிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடத்திட்டங்கள் அடங்கிய பிரத்யேக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்காக தமிழக அரசு சுமார் 2 கோடி ரூபாய் (ரூ.1.93 கோடி) நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிதியிலிருந்து இந்த செலவினங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.58,000-க்கும் அதிகமான பள்ளிகள் பலன்

இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 58,985 பள்ளிகளுக்கு உடற்கல்வி நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன. மொத்தமாக 2 லட்சத்து 68 ஆயிரம் புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக தயாராகி, அடுத்த வாரம் முதல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் பிற பாட வேளைகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டு, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு திறமை மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com