பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் - இரண்டாம் கட்டமாக விண்ணப்பம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் - இரண்டாம் கட்டமாக விண்ணப்பம்
Published on

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. தமிழ் நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதிசெய்திடும் பொருட்டு "இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்" வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும். இது அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். இளஞ்சிவப்பு ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி (commission) "ஊர் கேப்ஸ்" செயலி பயன்படுத்த வழிவகை செய்து தரப்படும்.

சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு சி.என்.ஜி (CNG) ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சர்வதேச மகளிர் தினமான 08.03.2025 அன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

இதனை தொடர்ந்து சி.என்.ஜி (CNG) ஆட்டோக்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 06.04.2025 தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வரவேற்கப்படுகின்றன.

i. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

iii. 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

iv. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

v. சென்னையில் குடியிருக்க வேண்டும்.

எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுனர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை 600 001. சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 06.04.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com