

உசிலம்பட்டி,
பி.கே. மூக்கையாத் தேவரின் 47-ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
அரசியலிலும், பொதுச் சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய பி.கே. மூக்கையாத் தேவரின் 47-ஆவது நினைவு நாளான 6.9.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையாத் தேவருடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக நிர்வாகிகள் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் செய்திடுவார்.
மூக்கையாத் தேவருக்கு வீர அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.