

சென்னை,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“த.வெ.க. தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகானுக்கும், வி.சி.க.வின் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. வன்னி அரசுவுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.
அதேவேளையில், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட கூடுதல் இடங்கள் இந்த த.வெ.க. அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும், உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.