சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு

நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு
Published on

தொற்றின் அடிப்படையில் மாவட்டங்கள் பிரிப்பு

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா தொற்றின் அடிப்படையில்

3 வகைகளாக மாவட்டங்கள் பிரித்து வெவ்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்துகிறது. அந்த வகையில், முதல் பிரிவில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர்,

நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் வருகின்றன. 2-ம் பிரிவில் அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் வருகின்றன. 3-ம் பிரிவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 வகையான மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

முதல்வகை மாவட்டங்கள்

இதில் முதல்வகை மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளை செய்யும் அனைத்து அரசுத் துறைகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீதம் ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களுக்கு அனுமதி இல்லை; ஜவுளி, நகை கடைகளுக்கு அனுமதி இல்லை. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. அருங்காட்சியகம், நினைவிடங்கள், தொல்லியல் பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை. ஏற்றுமதி நிறுவனம் தவிர அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் 33 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி. ஐ.டி., ஐ.டி.இ. 20 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களுக்கு அனுமதி இல்லை. சினிமா, டி.வி. தொடர்கள் படப்பிடிப்புக்கு அனுமதி (கொரோனா பரிசோதனைக்கு பின்பு). மாவட்டத்திற்குள்ளும், வெளியேயும் பொது போக்குவரத்திற்கு அனுமதி இல்லை

2-ம் வகை மாவட்டங்கள்

2-ம் வகை மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளை செய்யும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள் 100 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களுக்கு அனுமதி இல்லை. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. அருங்காட்சியகம், நினைவிடங்கள், தொல்லியல் பகுதிகளுக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி; டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி. ஏற்றுமதி நிறுவனம் தவிர அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி நிறுவனம் தவிர அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் 100 சதவீத தொழிலாளர்களுடனும், ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களுக்கு அனுமதி (ஏ.சி. இல்லாமல் 50 சதவீத நபர்களுடன்). சினிமா, டி.வி. தொடர்கள் படப்பிடிப்புக்கு அனுமதி (கொரோனா பரிசோதனைக்கு பின்பு). மாவட்டத்திற்குள்ளும், வெளியேயும் பொது போக்குவரத்திற்கு அனுமதி (ஏ.சி. இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன்);

3-ம் வகை மாவட்டங்கள்

இதேபோல் 3-ம் வகை மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளைச் செய்யும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி. ஜவுளி, நகை கடைகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி உண்டு. அருங்காட்சியகம், நினைவிடங்கள், தொல்லியல் பகுதிகளுக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி. ஏற்றுமதி நிறுவனம் தவிர அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி. ஐ.டி., நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களுக்கு அனுமதி (ஏ.சி. இல்லாமல் 50 சதவீத நபர்களுடன்); சினிமா, டி.வி. தொடர்கள் படப்பிடிப்புக்கு அனுமதி (கொரோனா பரிசோதனைக்கு பின்பு); மெட்ரோ ரெயில்களுக்கு அனுமதி (50 சதவீத இருக்கைகளில் மட்டும்); மாவட்டத்திற்குள்ளும், வெளியேயும் பொது போக்குவரத்திற்கு அனுமதி (ஏ.சி. இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன்)

இ-பாஸ் தேவை

மேலும் வகை 1-ல் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com