வழிபாட்டுத்தலங்களை தேர்தல் பிரசார களமாக மாற்றக்கூடாது - தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

மசூதி, தேவாலயம் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களை தேர்தல் பிரசார களமாக மாற்றக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் மாநில சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு, அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, பா.ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சட்டப்பிரிவு அணி நிர்வாகிகள் சந்திரமோகன், நவாஸ், ஆம் ஆத்மி வடசென்னை மாவட்ட தலைவர் பரூர் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் லலிதா, ஜெயசந்திர பானுரெட்டி, சென்னை கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே உள்பட மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, 'தேர்தல் பிரசார களமாக மசூதி, தேவாலயம் மற்றும் கோவில் போன்ற வழிபாட்டுத்தலங்களை பயன்படுத்தக்கூடாது. அரசியல் கட்சிகள் வாக்காளர் இறுதி பட்டியலில் முக்கிய பிரமுகர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் அது குறித்து தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளனர். அவர்களின் செல்போன் எண்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வெளியில் கொண்டு செல்லும் பட்சத்தில் தகுந்த ஆதாரம் வைத்து கொண்டு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இறந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரையில், சென்னை மாவட்டங்களில் உள்ள சுவர் ஓவியங்கள் 5 ஆயிரத்து 319, சுவரொட்டிகள் 2 ஆயிரத்து 931, பேனர் 149, இதரவகைகள் 158, என தேர்தல் பணியாளர்கள் கொண்டு 8 ஆயிரத்து 377 வகையான சுவர்ஓவியம் மற்றும் பேனர் போன்றவை எடுக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 'இ.எஸ்.எம்.எஸ்.' என்ற மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தின் விவரங்கள் பல்வேறு துறைகளுக்கு தகவலாக சென்றுவிடும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியான ஆதாரம் கொடுத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com