

சென்னை,
எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக்குறைக்க தாம்பரம் ரெயில் நிலைய தண்ட வாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள ரெயில் நிலையம் இரண்டாவது பெரிய முனையமாக உள்ளது. தாம்பரம் ரெயில் நிலையம் ஆண்டுக்கு 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளுகிறது. இருப்பினும், இந்த நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள், தொலைதூர ரெயில்கள் இயக்கப்படும் நடைமேடைகளை அடைவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 உயர்த்த நீட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, தண்டவாள மேம்பாடு மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. மேலும் அவை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ரெயில் நிலையத்தில் நீண்ட தூர ரெயில்களை இயக்குவதற்காக தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10லிருந்து 15ஆக அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இது முக்கிய நிலையமாகச் செயல்பட தொடங்கும். இந்த நிலையத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வழித்தட நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து, இரு புறங்களிலும் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும்.
மேலும் காத்திருப்பு அரங்குகள் கட்டுதல், நகரும் படிக்கட்டுகள் பொருத்துதல் மற்றும் அனைத்து நடைமேடைகளுடனும் இணைக்கும் படிக்கட்டுகள் அமைத்தல்.
இந்த அனைத்து உள்வேலைகளும் நடத்தப்படுகின்றன. புதிய நிலையத்தில், பயணச்சீட்டுகளுக்காக ஒரு மேம்படுத்தப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் ஒரு தங்கும் வசதி கொண்ட அறை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கவும், தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட பகுதி நகரங்களுக்குச் செல்லும் தொலைதூரம் செல்லும் ரெயில்களை கூடுதலாக இயக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.
இத்திட்டம் நிறைவேறினால், சென்னை எழும்பூரை விடப் பெரிய போக்குவரத்து மையமாகவும் உருவெடுக்கும். ரூ.19 கோடி செலவில் புதிய நடை மேம்பாலம், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் காத்திருப்போர் அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய நடை மேம்பாலத்தில் நவீன பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் தாம்பரம் முனையத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது என அதிகாரிகள் கூறினர்.