

சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 4,000 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளும், பீர் மற்றும் ஒயின் உள்ளிட்ட மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பீர் வகைகள் 7 மதுபான ஆலைகளிடமிருந்தும், ஒயின் ஒரு ஆலையிடமிருந்தும், இதர மதுபான வகைகள் 11 ஆலைகளிடமிருந்தும் டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மதுவகைகள், 40 பீர் வகைகள் மற்றும் 4 ஒயின் வகைகள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பிற மாநிலங்களில் இருந்து 6 மதுவகைகள், 5 பீர் வகைகள் மற்றும் 5 ஒயின் வகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மேலும், 538 வெளிநாட்டு மதுவகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மதுவகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய மதுவகைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, 25 புதிய மதுவகைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்வது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
அதில், 25 புதிய மதுவகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றுக்கான விலை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய மதுவகைகளுக்கான விலை நிர்ணயம் முடிந்த பிறகு, டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர், புதிய மதுவகைகள் டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.