சிறுசேரியில் 3-வது பணிமனை அமைக்க திட்டம்; மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை

சென்னையில் 2-வது கட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணியில் 3-வது பணிமனையை சிறுசேரியில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சிறுசேரியில் 3-வது பணிமனை அமைக்க திட்டம்; மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை
Published on

மெட்ரோ ரெயில் சேவை

சென்னை மாநகரில் முதல் கட்டத்தில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 128 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள், பாதைகள் மற்றும் பணிமனைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

இதில் மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை இயக்கப்படும் ரெயில்களுக்கு மாதவரத்திலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை இயக்கப்படும் ரெயில்களுக்காக பூந்தமல்லியிலும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை இயக்கப்படும் ரெயில்களுக்கு சிறுசேரியிலும் ரெயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சிறுசேரியில் பணிமனை

பின்னர், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் சிறுசேரியில் பணிமனை அமைக்கும் முடிவை கைவிட்டனர். இதனால், மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் ரூ.89 ஆயிரம் கோடி திட்டமதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், சிறுசேரியில் பணிமனை திட்டம் முதலில் கைவிடப்பட்ட உடன் திட்டமதிப்பு ரூ.61 ஆயிரத்து 843 கோடியாக குறைந்தது. மாதவரத்திலும், பூந்தமல்லியிலும் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில் இயக்க முடிவு செய்திருப்பதால், பூந்தமல்லியில் பணிமனை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் 2-வது கட்டத்தில் அமைக்கப்படும் ரெயில் பாதைகளில் 3 பெட்டிகளை கொண்ட 138 டிரைவர்கள் இல்லாத ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படவிருப்பதால் தலா 3 வழித்தடத்துக்கும் 3 பணிமனைகள் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அதன்படி சிறுசேரியில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு வழித்தடத்துக்கு ஒன்று

சிறுசேரியில் அமைக்கப்படும் ரெயில் பணிமனையில் ரெயில் பழுதுபார்க்கும் பணிகளை விட, இரவு நேரங்களில் அதிகளவில் ரெயில்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான தண்டவாளங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கமான ஆய்வு மற்றும் அவ்வப்போது சுத்தம் செய்ய ரெயில்கள் மாதவரம் பணிமனைக்கு சென்று மீண்டும் சிறுசேரிக்கு வந்து சேவையைத் தொடங்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

கண்டிப்பாக ஒரு வழித்தடத்துக்கு ஒரு பணிமனை தேவை என்று மெட்ரோ ரெயில் முன்னாள் அதிகாரிகளும் அறிவுறுத்தியதை தொடர்ந்து சிறுசேரியில் 3-வது பணிமனையை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com