

சென்னை,
அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் மாறி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை யில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். உங்கள் தரப்பு 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, 5 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறியது ஏன்? என கேள்வி கேட்டனர். அதற்கு அவர், 'இது தொடர்பாக பிறகு விரிவாக பதில் சொல்கிறேன்' என்றார். தொடர்ந்து அவர் காரில் ஏறி அமர்ந்து புறப்பட தயாரானார்.
அவரிடம், 'உங்கள் தரப்பில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 17 ஆக குறைந்துள்ளதே' என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் 25 எண்ணிக்கை 35 ஆகக்கூட மாறலாம். அதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது' என்றார். தொடர்ந்து, 'நீங்களும் த.வெ.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என நிருபர்கள் கேட்டபோது. 'தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம்' என காட்டமாக பதில் அளித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.