சுற்றுலா பயணிகளை கவர.. ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சி, கண்ணாடி பாலம் அமைக்க திட்டம்..!

ஒகேனக்கல்லில் வயது முதிர்ந்தவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவர.. ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சி, கண்ணாடி பாலம் அமைக்க திட்டம்..!
Published on: 

தர்மபுரி,

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் கண்ணாடி பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. ஒரு ஆண்டில் சராசரியாக 15 லட்சம் பேர் இங்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள்.

அருவிகளில் குளியல், பரிசல் சவாரி ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சங்களாக உள்ளன. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்து செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான கூடுதல் பொழுது போக்கு அம்சங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

செயற்கை நீர்வீழ்ச்சி

ஒகேனக்கல்லில் ரூ.17 கோடியே 57 லட்சம் மதிப்பில் சுற்றுலா சார்ந்த மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த வசதிகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. ஒகேனக்கல்லில் வயது முதிர்ந்தவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இதேபோல் அருவிகள் அமைந்துள்ள பகுதி அருகே இயற்கை அழகை முழுமையாக கண்டுகளிக்கவும், அருவிகளில் இருந்து நீர் திவலைகள் விழுவதை கண்டு ரசித்து சாகச உணர்வை பெறவும் கண்ணாடி பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின்பு உரிய பரிந்துரைகளை பெற்று இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X