பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் உள்ள தியாகராயநகர், மயிலாப்பூர் பகுதிகளில் விரைவில் பணிகள் தொடங்க திட்டம்; மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

தியாகராயநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் உள்ள தியாகராயநகர், மயிலாப்பூர் பகுதிகளில் விரைவில் பணிகள் தொடங்க திட்டம்; மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
Published on

பூந்தமல்லி-கலங்கரை விளக்கம்

சென்னையில் மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்- சிப்காட் மற்றும் பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் ஆகிய 3 வழித்தடங்களில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கான கட்டமைப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் இடையே முதல் கட்டமாக பணிகள் நடக்க இருக்கிறது. 3 வழித்தடங்கள் அமைப்பதற்காக 17 ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகிறது. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் போது சென்னை மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைய வாய்ப்பு உள்ளது.

பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் திட்டத்தில் முதல் கட்டமாக கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே 9.95 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 5.15 கிலோ மீட்டர் தூரத்தில் இரட்டை சுரங்கப்பாதை அமைகிறது. இதில் 4 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. மேலும் 4.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான உயர்த்தப்பட்ட பாதையில் 5 ரெயில் நிலையங்களும் மொத்தம் 9 ரெயில் நிலையங்கள் உருவாகின்றன.

புறநகர் பகுதிகள் இணைப்பு

இத்திட்டப்பணிகளை விரைவில் முடித்து சேவையை தொடங்கும் வகையில் தற்போது 2 ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகிறது. கட்டுமான பணிகள் தாமதமின்றி வேகமாக நடைபெறும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகள் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பாதையில் உள்ள தியாகராயநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும். கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த பகுதிகள் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. நிறுவனங்கள்) அதிகமுள்ள இந்த வழித்தடம் சென்னையை இணைக்கம் வகையில் அமைகிறது. பூந்தமல்லி வரை நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின் மூலம் மெரினா, மயிலாப்பூர், கோடம்பாக்கம், நந்தனம், தியாகராயநகர், வடபழனி, சாலிகிராமம், ஆகிய நகரப்பகுதிகளுடன் புறநகர் பகுதிகள் இணைய வாய்ப்பு உள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க இருக்கிறது.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com