

சென்னை,
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப ஒப்படைப்பதன் மூலம், ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்கள் கையாளும் நடைமுறைக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இத்திட்டம் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. டாஸ்மாக் பணியாளர்கள் அல்லாத பிற நபர்களைக் கொண்டு பாட்டில்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் இயந்திரம் மூலம் காலி பாட்டில்களை திரும்பப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயந்திரத்தை டாஸ்மாக் கடைகளில் வைப்பதன் மூலம் ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த இயந்திரம் அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் வைத்து சோதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தகட்டமாக டாஸ்மாக் கடைகளில் இந்த இயந்திரத்தை நிறுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.