மணலி மண்டலத்தில் 1.30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: இணை ஆணையாளர் கற்பகம் ஆய்வு

மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மணலி மண்டலத்தில் 1.30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: இணை ஆணையாளர் கற்பகம் ஆய்வு
இணை ஆணையாளர் கற்பகம்
Published on: 

சென்னை,

மணலி மண்டலத்தில், 1,30,000 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், வார்டு-22க்குட்பட்ட , பியூச்சுரா லேஅவுட் பகுதியில், நடைபெற்று வரும் மரக்கன்றுகள் நடும் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) கற்பகம், நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

12 லட்சம் மரக்கன்றுகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

28,276 மரக்கன்றுகள் நடவு

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில், 1,30,000 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், வார்டு-22க்குட்பட்ட, பியூச்சுரா லேஅவுட் பகுதியில், நடைபெற்று வரும் மரக்கன்றுகள் நடும் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) கற்பகம், இன்று (16.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 28,276 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

இந்நிகழ்வின்போது, பசுமை பரப்பை அதிகரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் தூய்மையான, ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்ய, அவற்றை முறையாக பராமரித்தல் மற்றும் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம் என இணை ஆணையர் வலியுறுத்தினார்.

மேலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,30,000 மரக்கன்றுகள் நடும் இலக்கினை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X