கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 40 போலீசார் பிளாஸ்மா தானம்

சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்த 40 போலீசார் நேற்று பிளாஸ்மா தானம் செய்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 40 போலீசார் பிளாஸ்மா தானம்
Published on

சென்னை,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் வெகுவாக குணம் அடைந்து வருகின்றனர். இந்த சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால், அரசு இதனை ஊக்குவித்து வருகிறது.

இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்மா வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்த 40 போலீசார் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிளாஸ்மா தானம் செய்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பிளாஸ்மா தானம் செய்த போலீசாரை சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன், போலீஸ் கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், மல்லிகா உள்பட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்மா வங்கி தொடங்கிய 20 நாட்களில் 76 பேர் பிளாஸ்மா தானம் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் 89 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து இருக்கிறார்கள். பிளாஸ்மா தானத்தின் மூலம், ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் மட்டும் 70 பேர் குணம் அடைந்து உள்ளனர்.

அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் தெரிவித்து இருந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 40 போலீசார் பிளாஸ்மா தானம் வழங்கி உள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். 40 பேர் பிளாஸ்மா தானம் செய்வதன் மூலம் 80 பேர் பயன்பெற முடியும்.

போலீசாரை பின்பற்றி பிளாஸ்மா தானத்தை மக்கள் இயக்கமாக அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா சிகிச்சையில் குணம் அடைந்தவர்கள் தானாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய 3 இடங்களில் பிளாஸ்மா வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இன்னும் 6 மருத்துவ கல்லூரிகளில் பிளாஸ்மா தானம் செய்யும் வழிமுறைகளை செய்ய உள்ளோம். மொத்தம் 9 இடங்களில் அமைக்க உள்ளோம்.

இந்தியாவிலேயே பிளாஸ்மா தானத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பரிசோதனை முறையில் நடத்தி அதில் வெற்றி பெற்று அதிகமான அளவு தானம் வழங்கியவர்கள் பட்டியலில் தமிழகம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com