தமிழகத்தில் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை - ‘டீன்’ தகவல்

தமிழகத்தில் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கப்படும் என்று சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நாராயணபாபு கூறினார்.
தமிழகத்தில் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை - ‘டீன்’ தகவல்
Published on

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நாராயணபாபு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு தேவையான அனைத்து முதற்கட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் தேவையான அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை மேற்கொண்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவோருக்கும் முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்க முடியாது. 3 வாரங்களுக்கு பிறகு அதாவது அவர்களது உடல்நிலை சரியான பிறகு அவர்களிடம் இருந்து ரத்தம் பெற்று, அதை பரிசோதித்து பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஏனெனில் கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கும். விலைமதிக்க முடியாத மருத்துவ சக்தியும் அதில் இருக்கும்.

தற்போது அந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அதை செயல்படுத்த இருக்கிறோம். உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com