மாம்பழ விவசாயிகளின் பக்கம் மனசு வையுங்கள் முதல்-அமைச்சரே - நயினார் நாகேந்திரன்

மாம்பழங்களுக்கான உரிய விலையை நிர்ணயித்து அவர்தம் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்ற வாரம் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்ட மாம்பழ விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால் டன் கணக்கில் மாம்பழங்களை சாலைகளில் கொட்டி தங்களது ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தினார்கள். அதேபோல் இன்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விலை வீழ்ச்சியால் மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்பட்டிருக்கின்றன.

கண்ணீரைத் துடைக்க வேண்டும்

இம்முறை இப்பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தால் விளைச்சல் அதிகமாகி விட்டது. இந்த சூழ்நிலையை தனியார் மாம்பழக் கூழ் ஆலைகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அடிமட்ட விலைக்கு மாம்பழங்களைக் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கும் கடுமையான நிதி நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர்.

கடன் வாங்கி, கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களின் விலை மதிப்பு, அதன் பறிப்புக் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என கண்ணீர் வடிக்கும் மாம்பழ விவசாயிகளின் வேதனையை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சற்று கருணையுடன் அணுக வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள், உடனடியாக மாம்பழ விவசாயிகளின் பக்கம் கவனத்தை செலுத்தி மாம்பழங்களுக்கான உரிய விலையை நிர்ணயித்து அவர்தம் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com