தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி!

ரெயில் பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் அம்பராம்பாளையம் பகுதியில் சென்றபோது, தண்டவாளத்தில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது.
ரெயிலை கவிழ்க்க சதி
Published on: 

கோவை,

தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெயிலை கவிழ்க்க சதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வழியாக எர்ணாகுளம் நோக்கி மெழு ரெயில் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் அம்பராம்பாளையம் பகுதியில் சென்றபோது, தண்டவாளத்தில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அதிகாலை நேரம் இருள்சூழ்ந்து இருந்ததால் தண்டவாளத்தில் கிடந்த பொருள் குறித்து தெரியவில்லை.

தொடர்ந்து ரெயில் அங்கிருந்து மீனாட்சிபுரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு ரெயில் நிலைய அதிகாரியிடம் நடந்த சம்பவம் குறித்து என்ஜின் டிரைவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரி, பாலக்காடு கோட்ட ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தண்டவாளத்தின் அருகில் பெரிய கல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த அந்த கல் மீது ரெயிலின் முன்பகுதியில் உள்ள தடுப்பு கம்பி மோதியதில், அது தூக்கி வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது. அங்கு ஆனைமலை போலீசாரும் வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் பாலக்காடு கோட்ட ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் பி.குமார் வந்து ஆய்வு செய்தார்.

அப்போது கோவை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பாபு, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மிலன் பிக்கோலா ஆகியோர் உடனிருந்தனர். பெரிய கல்லை வைத்து இருந்ததால் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் நடைபெற்று உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் அந்த பகுதியில் அமர்ந்து இரவு நேரங்களில் மது குடிக்கும் நபர்களின் விவரங்களை விசாரிப்பதோடு கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது-

அரியானாவில் இருந்து பாலக்காடு வழியாக பொள்ளாச்சிக்கு கார்களை ஏற்றி வந்த சரக்கு ரெயில் அம்பராம்பாளையம் பகுதியை நள்ளிரவு 12.20 மணிக்கு கடந்தது. அப்போது தண்டவாளத்தில் கல் வைக்கப்படவில்லை. அதன்பிறகுதான் யாரோ கல்லை வைத்திருக்க வேண்டும். அந்த கல்லால் ரெயிலுக்கு எந்த சேதமும் இல்லை.

ரெயில் மோதியதில் சுமார் 40 மீட்டர் தூரம் கல் தூக்கி வீசப்பட்டு உள்ளது. இதில் கல்லின் ஒரு பகுதி உடைந்து உள்ளது. தனிப்ப டைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X