

சென்னை,
தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தேவையில்லாத செல்போன் அழைப்புகள் வருவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தாம்பரம் மாநகர காவல், மத்திய குற்றப்பிரிவு இணையவழி குற்றப்பிரிவு போலிசார் விசாரணை நடத்தினர்.
மேலும் விசாரணைக்காக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சாய் குமாரின் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் வேல்முருகனின் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணின் ஆண் நண்பரான கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் தோகமலையை சேர்ந்த சிவபிரகாஷ் தான் இவ்வாறு செய்துள்ளார் என்பதை போலிசார் உறுதிபடுத்தினார்கள். மேலும் விசாரணையில் அந்த நபர் தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அந்நபரை கைது செய்து விசாரணை செய்ததில், அந்நபர் புகார்தாரரை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அப்பெண்ணின் அனுதாபம் மற்றும் நம்பிக்கை பெறும் நோக்கில் இப்பிரச்சனையை உருவாக்கி ஆறுதல் கூறி தன் காதல் வலையில் வீழ்த்தலாம் என திட்டம் தீட்டி இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அந்நபரை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜார் செய்தனர்.
மேலும் இச்செயலுக்கு பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சாய் குமார், தனது பாரட்டுகளை தெரிவித்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிராக குற்றங்களில் ஈடுபடுவோர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.