

கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகள் பிரேமா(வயது 17). இவர் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டுக்கு அவரது உறவினரான திருக்கோவிலூர் அருகே பாடியந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் விஜய் என்பவர் வந்து செல்வது வழக்கம். அப்போது விஜய்க்கும், பிரேமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சேகர் இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அங்கு விசாரணைக்கு வந்த விஜயின் தந்தை கோவிந்தன், சேகர் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார். இதனால் சேகர் சமாதானம் அடைந்தார். ஆனால் சக்திவேல் மனைவி அலமேலு தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சேகர் வீட்டில் இல்லாதபோது, சக்திவேல், அலமேலு இவர்களின் மகன் வல்லரசு ஆகியோர் சேகர் வீட்டுக்கு வந்து அங்கிருந்த பிரேமாவை திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் விஜய், சக்திவேல், அலமேலு, வல்லரசு ஆகிய 4 பேர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.