தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி

மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி
Published on

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. புண்ணிய மூர்த்தி என்பவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஆர்த்திகா, பொதுத்தேர்வு எழுதி இருந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருந்தநிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் ஆர்த்திகா வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாபநாசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், வந்த போலீசார் ஆர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9 மணி அளவில் வெளியானது. இந்த தேர்வில் மாணவி ஆர்த்திகா இரண்டாவது குரூப் படித்து வந்துள்ளார். அதில் ஒவ்வொரு பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதன்படி தமிழ் பாடத்தில் -72 மதிப்பெண்கள், ஆங்கிலம் பாடத்தில் - 48 மதிப்பெண்கள், இயற்பியல் பாடத்தில்- 65 மதிப்பெண்கள், வேதியியல் பாடத்தில் -78 மதிப்பெண்கள், விலங்கியல் படத்தில் -80 மதிப்பெண்கள், தாவரவியல் பாடத்தில் - 70 மதிப்பெண்கள் என ஆக மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவி ஆர்த்திகா தேர்வில் வெற்றி பெற்றதை கண்டு பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com