வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு - போலீசார் விசாரணை
Published on

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் அருகே இந்திராபுதுநகர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி (17 வயது). இவர் உடுமலை பாபுகான் வீதியில் உள்ள பெண்கள் சமூக நல விடுதியில் தங்கியிருந்து, உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் வகுப்புகள் முடிந்ததும், மதிய உணவுக்காக விடுதிக்கு வந்தார். பள்ளியில் இருந்து விடுதி சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் புவனேஸ்வரி வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.

அப்போது வகுப்பறையில் புவனேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே புவனேஷ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வந்த உடுமலை போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மாணவியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com