பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு; அக்காளுடன் பழகுவதை கைவிடாததால் 10ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்- நெல்லையில் பயங்கரம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் ஒரே வகுப்பில் படிக்கும் பிளஸ் 2 மாணவனும், மாணவியும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு; அக்காளுடன் பழகுவதை கைவிடாததால் 10ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்- நெல்லையில் பயங்கரம்
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான். அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரும் இந்த மாணவனுடன் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்றபிறகும் அந்த மாணவர் செல்போனில் மாணவியுடன் மணிக்கணக்கில் பேசுவாராம். இந்த விவகாரம் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் 15 வயதான தம்பிக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது அக்காவுடன் பேசுவதை நிறுத்துமாறு அந்த பிளஸ்-2 மாணவரிடம் அடிக்கடி மிரட்டும் வகையில் கூறியுள்ளார். ஆனால் அந்த பிளஸ்-2 மாணவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பழகி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தம்பி, அக்காவுடன் பழகும் பிளஸ்-2 மாணவரை தாக்குவதற்கு திட்டமிட்டார். இதுகுறித்து தனது வகுப்பில் படிக்கும் நண்பரான 15 வயது சிறுவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அதேபகுதியில் வசிக்கும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுவர்கள் 3 பேரிடம் சென்று பேசி திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவில் மாணவியின் தம்பி உள்பட 5 சிறுவர்களும் சேர்ந்து அந்த பிளஸ்-2 மாணவரின் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு அந்த மாணவரை சந்தித்து, உங்களுடன் பேசவேண்டும், என்னோடு வாருங்கள் என்று கூறினர். இதனை ஏற்று பிளஸ்-2 மாணவரும் 5 சிறுவர்கள் உடன் சென்றுள்ளார். அப்போது தெருவின் ஓரத்தில் ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு பிளஸ்-2 மாணவரை அவர்கள் அழைத்து சென்றனர். பின்னர் சற்றும் தாமதிக்காமல் மாணவியின் தம்பி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிளஸ்-2 மாணவரை வெட்டினான். இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதை எதிர்பாராத பிளஸ்-2 மாணவன் படுகாயத்துடன் அலறினான். உடனே 5 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த பிளஸ்-2 மாணவர் மீட்கப்பட்டு சேரன்மாதேவியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிளஸ்-2 மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிளஸ்-2 மாணவனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மாணவியின் தம்பி உள்பட 5 சிறுவர்களையும் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர்களை சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அக்காவுடன் பழகுவதை கைவிடாததால் பிளஸ்-2 மாணவரை, மாணவியின் தம்பி உள்பட 5 சிறுவர்கள் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com