

கடலூர்,
பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கோழியூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் துர்கா (16 வயது). திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் துர்கா, நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச் சென்றார். பின்னர் அவர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர், உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, உடல் கருகிய நிலையில் துர்கா இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துர்காவின் உடலை பார்வையிட்டனர். அப்போது துர்கா உறவினர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், துர்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.