பிளஸ்-2 மாணவி கொலை; குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறல்

பிளஸ்-2 மாணவி கொலையில் இன்னும் துப்பு துலங்காத நிலையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 10 தனிப்படை போலீசார் திணறி வரு கின்றனர்.
பிளஸ்-2 மாணவி கொலை; குற்றவாளிகளை பிடிக்க முடியாமல்  தனிப்படை போலீசார் திணறல்
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்–2 மாணவி கடந்த 10-ந் தேதி இரவு திடீரென மாயமானார். 11-ந் தேதி காலை அந்த மாணவி பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.இதனால் ஆவேசமடைந்த மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பலரும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், குற்றவாளிகளை கைது செய்தால் தான் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வோம் என அவரது பெற்றோரும் உறவினர்களும் மறுத்து, 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் முதலில் 14 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு மாணவியுடன் படித்த மாணவர்கள் மற்றும் மாணவியின் உறவினர்களில் சந்தேகப்படும் நபர்கள் என ஒவ்வொருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் 4 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித துப்பும் துலங்காத நிலையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் 10 தனிப்படை போலீசாரும் திணறி வருகின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டதில் இருந்து நேற்று வரை இன்னும் குற்றவாளிகள் சிக்காத நிலையில் அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com