

திருப்பூர்,
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரெயிலில் அடிபட்டு தந்தை இறந்த நிலையில், தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் மகளும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (39 வயது). எந்திர பிட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜானகி (37 வயது). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் சாதனா (16 வயது). தனது தாய் வேலை செய்து வந்த பள்ளியில் சாதனா பிளஸ் 2 படித்து வந்தார். இந்த பள்ளி வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாதனா தினமும் தனது வீட்டுக்கு அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தண்டவாளம் அருகில் வந்தபோது, புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ரெயில் விரைந்து சென்று கொண்டிருந்தது. திடீரென மாணவி, ரெயில் முன் பாய்ந்தார். இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் மோதியதில் சாதனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சாதனா தனது தந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். கார்த்திக் தனது மகளை தினமும் ரெயில் தண்டவாளத்தை கடந்து, பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி, கார்த்திக் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
தந்தை இறந்ததில் இருந்து சாதனா மிகவும் சோர்வாக இருந்துள்ளார். பள்ளியில் சக மாணவிகளிடம் தனது தந்தை பற்றியே பேசி வந்தார். மாணவிகளும், ஆசிரியர்களும் அவளை தேற்றி வந்தனர். 'எனது அப்பா இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை' என அடிக்கடி சக மாணவிகளிடம் சாதனா கூறியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தண்டவாளம் வழியாக நடந்து வந்த சாதனா, தனது தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்த இடத்தின் அருகிலேயே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.