மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி, விஜய் இணைந்து பயணம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி சென்னை வருகிறார்.
மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி, விஜய் இணைந்து பயணம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Published on: 

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தை தொடங்கி வைக்க 11-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப் போது முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து அவர் மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறார்.

பூந்தமல்லி-வடபழனி

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்போது அதன் 2-ம் கட்ட பணிகள் நிறைவடைந்து திறப்புக்காக காத்திருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலான 14.64 கி.மீ நீளமுள்ள பாதை தான், 2-ம் கட்ட திட்டத்தின் முதல் செயல்பாட்டு பகுதியாகும்.

பூந்தமல்லி-வடபழனி இடையேயான வழித்தடம்-4 என்ற மஞ்சள் பாதையை பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக அவர் 11-ந்தேதி காலை 10.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

பிரதமர், முதல்-அமைச்சர் பயணம்

அங்கிருந்து அவர் பூந்தமல்லிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். காலை 11.30 மணிக்கு பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில், பூந்தமல்லி-வடபழனி இடையிலான 14.64 கி.மீ நீளமுள்ள முதல் செயல்பாட்டுப் பகுதியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பின்னர் அவர் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரெயிலில் குறுகிய பயணத்தை மேற்கொள்வார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார். விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும்.

பாதுகாப்பு ஏற்பாடு

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் பற்றி சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்பட பல உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com