மத்திய அரசின் முழுமையான அணுகுமுறையை இடைக்கால பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளது - அண்ணாமலை அறிக்கை

கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதில் பிரதமர் மோடி அரசு சிறப்பாக செயல்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை மேம்படுத்துவதில் மத்திய அரசின் முழுமையான அணுகுமுறையை இடைக்கால பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் 2047-ம் ஆண்டு நமது நாட்டை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை மேம்படுத்துவதில் மத்திய அரசின் முழுமையான அணுகுமுறையை இந்த இடைக்கால பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளது.

வீட்டின் மேற்கூரையில் சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு ஒவ்வெரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதமரின் அன்ன யோஜனா போன்ற மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், நாட்டின் 80 கோடி மக்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்க உதவியுள்ளது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வருமானவரித்துறையின் வரி கோரிக்கைகளை திரும்ப பெறுவதாக அறிவித்த மத்திய மந்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். விக்சித் பாரத் திட்டத்தின் மூலம் புதிய சீர்திருத்தங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வசதியாக 50 ஆண்டுகள் வட்டியில்லா கடனாக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com