வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

வளைகுடா பிராந்தியத்தில் அமைதி திரும்ப இந்தியா முழு ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
Published on

புதுடெல்லி,

ஈரான் மீது நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

தெஹ்ரானில் உள்ள காமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இந்த தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அலி காமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. அதே சமயம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் வளைகுடா நாடுகளில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பஹ்ரைன் அரசர், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின்போது பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு திரும்ப இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதே சமயம், அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வளைகுடா நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com