பிரதமர் மோடி வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28-ந்தேதி மாலை சென்னை வருகிறார்.
பிரதமர் மோடி வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு
Published on

சென்னை,

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28-ந்தேதி மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

பிரதமரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 28-ந்தேதி மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மேடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை வளாகத்தை சென்றடைகிறார். அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். வழிநெடுக பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் வருகையையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 காவல் அடுக்காக நின்று மத்திய-மாநில போலீசார் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இதே போன்று கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 தேதிகளிலும் சென்னை மாநகரில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாறு ஐ.என்.எஸ். முதல் நேரு ஸ்டேடியம் வரையிலும், கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com